திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவின் நோக்கம் என்ன...?

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.  இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் சூரனை வென்ற இடமானதால் கந்த சஷ்டி நிகழ்ச்சியானது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனின் செயல்கள் திரும்ப செய்து காட்டப் படுதலே இத்திரு விழாவின் நோக்கம் ஆகும். இவ்விழாவின் போது ஐப்பசி அமாவாசையை அடுத்து ஆறு நாட்களிலும் வள்ளி, தெய்வானை  கோயில்களுக்கிடையேயுள்ள வேள்விக் கூடத்தில் காலையிலும் மாலையிலும் வேள்வி நடைபெறுகிறது.
 
முதல் ஐந்து நாட்கள் இரவில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இங்கு அவருக்கு  திருமுழுக்காட்டி தங்க தேரில் வீதி வலம் வரச் செய்யப்படுகிறார்.
 
ஆறாம் நாள் மாலை நான்கு மணி அளவில் கடற்கரையில் சூரனை வெல்லும் திருவிழா தொடங்குகிறது. முதலில் யானைமுகம் கொண்ட தாரகனுடன் போர் தொடங்குகிறது. அவன் வலமிடமாக முருகனை சுற்றி வருகிறான். தலையில் பட்டுக் கட்டிய பட்டர் வேலால் அச் சூரனை நெற்றியில் குத்தி வீழ்த்துகிறார்.
 
அதே உடலில் சிங்கமுகன் தலை பொருத்தப்படுகிறது. சிங்க முகன் முருகனை வலமிடமாகச் சுற்றி வருகிறான். பட்டர் சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துகிறார். அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படுகிறது. சூரனும் முருகனை வலமிடமாக வருகிறான். இப்போது சூரனின் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துகிறார். நான்காவதாக மாமரமும் சேவலும் அவ்வுடலில் பொருத்தப்படுகின்றன. மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறக்கிறது.
 
ஒரே உடலில் தலைகளைப் பொருத்துவது ஒரே உடலில் மாயை, கன்மம், ஆணவம் பொருந்தியுள்ளதைக் குறிப்பிடுகிறது. சூரனை வென்ற பின் கடற்கரையிலுள்ள சஷ்டி  மண்டபம் என்னுமிடத்தில் முருகனை அமர்த்தி வழிபாடு நடத்துகின்றனர்.
 
அப்போது கடல் அலைகளோடு போட்டியிடுவது போல் மனிதர் தலைகள் அதிக அளவில் காணப்படும். பின் இரவில் 108 மகாதேவர் முன்பு செயந்தி நாதரை அமர்த்தி வேள்விக் கூடத்தில் இது நாள் வரை கும்பங்களில் வைத்திருந்த நீரை எடுத்து வருவர். முருகனுக்கு முன் கண்ணாடி பிடிக்கப்படும். கண்ணாடியில் தெரியும் நிழலுக்கு கும்பநீரால் அபிசேகம் நடத்தப்படுகிறது. இதற்கு சாயாபிடேகம் என்று பெயர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்