இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பியவர் கைது

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (09:06 IST)
தூத்துக்குடியில் திருமணமான இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
 
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், ‘ஒரு செல்போன் எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  கூறியிருந்தார்.
 
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
 
அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்கள் வரும் செல்போன் எண் யாருடையது? என்பதை கண்டுபிடித்தனர். அது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாரிதுரை (வயது 27) என்பது தெரியவந்தது.
 
நேற்று முன்தினம் அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தான் இளம்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது.
 
இதையடுத்து பெண் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மாரிதுரையை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்