கரூரில் பிரம்மாண்ட யோகா தின விழா : 6 ஆயிரம் பேர் பங்கேற்பு

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (16:47 IST)
இன்று (21.06.2017)  3- வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் அருகே பரணிபார்க் கல்விக்குழுமத்தில் பரணிபார்க் சாரணர் மாவட்டம் மற்றும் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் மாணவ - மாணவிகளின் யோகா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதிமோகனரெங்கன் முன்னிலை வகித்தார். 


 

 
பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவரும் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ராமசுப்பிரமணியன் பேசுகையில் “இந்தியாவின் பாரம்பாரிய பெருமையையும், உலக அமைதியையும் வலியுறுத்தும் வகையில் பரணிபார்க் சாரணர் மாவட்டத்தின் சாரண மாணவர்களும், திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் திருக்குறள் மாணவர்களும் இணைந்து 6000 பேர் 6 அணிகளாக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். 


 

 
இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக அனைவரும் இணைந்து திருக்குறளின் கடவுள் வாழ்த்து, கல்வி, நாடு ஆகிய அதிகாரங்களை பாடி யோகா தின கொண்டாடங்களை தொடங்கினர். மேலும் சாரணர் இயக்க மாணவ, மாணவியர் "Messengers of Peace" என்ற எழுத்துக்களுடன் யோகா தின சின்னம் மற்றும் உலக சாரணர் இயக்க சமாதானப் புறா சின்னம் வடிவங்களில் நின்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர்”  என்று கூறினார்.



 
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
 
அடுத்த கட்டுரையில்