20 லட்ச ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் சேதம்… எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வருத்தம்!
புதன், 6 டிசம்பர் 2023 (09:02 IST)
தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் எஸ் ராமகிருஷ்ணன். நாவல்கள், சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனங்கள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாடெமி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
தேசாந்திரி என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி தன்னுடைய நூல்களை தானே வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அவரின் பதிப்பக அலுவலகத்துக்குள் வெள்ள நீர் புகுந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரின் புத்தகங்கள் நீரில் நனைந்து சேதமாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின.
கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.
நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள்.
மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான் தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.
புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை.
நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு.” என கூறியுள்ளார்.