பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல், செயல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்: நீதிமன்றம்

Siva

வியாழன், 23 ஜனவரி 2025 (16:49 IST)
பணியிடங்களில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவு அதிகாரிக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அந்நிறுவனத்தின் விசாகா குழு, அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க கூடாது என பரிந்துரைத்தது

விசாகா குழுவின் பரிந்துரை ஒருதலைபட்சமானது என அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாகா குழு பரிந்துரையை நீதிமன்றம் ரத்து செய்தது.

தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. புகாரளித்த பெண்களின் இருக்கைக்கு பின்னால் அந்த அதிகாரி நின்றதாகவும், உடல் அளவைக் கேட்டதாகவும் நிறுவனம் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

உயரதிகாரி என்ற முறையில் இருக்கைக்கு பின்னால் நின்று கண்காணித்தேன். பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கம் இல்லை என அதிகாரி தரப்பு வாதம் செய்யப்பட்டது. ஆனால் பணியிடத்தில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சொல் மற்றும் செயல்களும் பாலியல் துன்புறுத்தல் தான் என உத்தரவிட்ட நீதிபதி மஞ்சுளா, விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்