அதிசயம் செய்த ஸ்டான்லி மருத்துவர்கள்! : கிட்னி ஆப்ரேஷன் செய்த பெண்ணுக்கு பிரசவம்

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (10:41 IST)
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 

 
இருபத்து மூன்று வயதான சூர்யகலா என்பவருக்கு 4.11.2013 தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பிற்காக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் தடுப்பு மருந்துகள் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.
 
2015 ஜூன் மாதம் அவருக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவரின் ஆலோசனைக்கு பின் கருவுற்றார். சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். ஸ்கேன் மற்றும் தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு சிறநீரக மாற்று சிகிச்சைக்கான சிறப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டது.
 
34ஆம் வாரத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்மாதம் 4 ஆம் தேதி 36 வாரத்தில் குழந்தையின் இதய துடிப்பு குறைவாக இருந்ததால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 2 கிலோ எடையுள்ள அழகான பெண் குழந்தை பெற்றார். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறுநீரகத் துறைக்கு மாற்றப்பட்டார்.
 
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்கள் மருத்துவ அறிவுரைக்கு பின் கருத்தரிக்கலாம். ஆனால் அதற்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
 
ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்மணிக்கு நடந்த பிரசவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்