கள்ளச்சாராய மரணங்களின்போது, ஒருமுறை கூட அப்பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றமே வலியுறுத்திய பிறகாவது, கல்வராயன் மலைப் பகுதி மக்களை சந்தீப்பீர்களா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்னும் உங்களுக்கு கள்ளக்குறிச்சிக்கு செல்ல வழி தெரியவில்லையா முதல்வர் மு.க.ஸ்டாலின்? கல்வராயன் மலைக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தியுங்கள் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வலியுறுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனை விசாரித்த நீதிபதிகள், சுற்றுலாத் தலத்துக்கு உகந்த பகுதியாக திகழும் கல்வராயன் மலைப்பகுதியில், சாராயம் காய்ச்சுவதை மட்டுமே முக்கியத் தொழிலாகக் கொண்ட அம்மக்களின் மறுவாழ்வுக்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடன் சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின்போது, நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட அப்பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை. ஆனால், இன்று உயர் நீதிமன்றமே வலியுறுத்திய பிறகாவது, கல்வராயன் மலைப் பகுதி மக்களை சென்று சந்தீப்பீர்களா முதல்வர் ஸ்டாலின்? என்று தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.