தமிழகத்தில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ₹2,000 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஆதாரங்களை ஆய்வு செய்ய, நிதித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் திமுக, மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, 2023 செப்டம்பர் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, விடுபட்ட தகுதியுள்ள பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்துவதன் மூலம் பெண்களின் ஆதரவைப் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை குறித்து நிதித்துறை விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.