தேமுதிக ஆட்சி அமைக்கும்...பிரேமலதா விஜயகாந்த்தின் நம்பிக்கை பலிக்குமா ?

வியாழன், 7 நவம்பர் 2019 (14:30 IST)
திமுகவுக்கு மாற்றாக அதிமுக வந்தது. அதேபோல் இவ்விரண்டு கட்சிகளுக்கு மாற்றாக பல எண்ணற்றக் கட்சிகள் தோன்றினாலும், பல சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் கூட, கட்சி தொடங்கிய மிகக்குறுகிய காலத்தில் மக்களிடம் செல்வாக்குப் பெற்று சட்டப் பேரவையில் எதிர்கட்சியான பெருமை தேமுதிகவுக்குத்தான் உண்டு.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலக் குறைவு கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக கட்சியின் காலை வாரிவிட்டது. ஆனால் ஆளும் கட்சியின் செல்வாக்கோடு கூட்டணிக் கட்சியாக வலம் வரும் தேமுதிகவுக்கு விஜயகாந்தின் வழிகாட்டல் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 
இந்நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், இன்று, சென்னை ,சத்திரத்தில் உள்ள  தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிக கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.
 
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்டதே ஆட்சி அமைப்பதற்குத் தான்’ என  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் எதிர்காலம் என்பது அக்கட்சி இனிவரும் காலத்தில் எடுக்கப்போகிற துரிதமாக நடவடிக்கைகளிலும், தேர்தல் வெற்றியிலும்தான் உள்ளது. ஆனால் அக்கட்சி அதிமுகவை சார்ந்து இருப்பதுதான் அக்கட்சியின் பலவீனமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஏனென்றால் விஜயகாந்த் என்ற அதிரடி மக்கள் நாயகன் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கி வந்தபோது அவரை கொண்டாடிய மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதாகவும் தெரிகிறது.
 
எனவே கட்சியை குடும்பத்தின் பிடியில் வைக்காமல், ஜனரஞ்சமான முறையில் விஜயகாந்த் கட்சியை இயக்கினால் மட்டுமே கட்சி மீண்டுவரும் என்றும் பிரேமலதா சொன்னதுபோல ஆட்சி அமைக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்