டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் உள்பட 11 எம்எல்ஏக்கள் இரட்டை பதவிகளை வகித்து வருவதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ மற்றொரு பதவியை வகிப்பது சட்டவிரோதம் என்றும், இதனால் இந்த 11 எம்எல்ஏக்களின் பதவியை நீக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது
இந்த புகார் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் 11 எம்எல்ஏக்களும் இரட்டை பதவிகளை வகித்தாலும், கூடுதலான பதவி மூலம் சம்பளம் உட்பட எந்த சலுகையையும் அவர்கள் பெறவில்லை என்றும், அதேபோல் கூடுதல் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும், எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் பதிலளித்தது
இந்த பதிலை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தார். இதனை அடுத்து டெல்லியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது