தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'பிரவோக்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக உள்ளார் அப்சரா ரெட்டி. பல்வேறு பிரபலங்களை பேட்டி கண்டுள்ள திருநங்கை அப்சரா ரெட்டி, தனது ‘ப்ரவோக்’ மாத இதழுக்காக சசிகலாவிடம் சுமார் 45 நிமிடம் பேட்டி எடுத்துள்ளார்.
இது குறித்து, ’தி இந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அப்சரா ரெட்டி, “பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகள் தான் இங்கே இருக்கவில்லை என்பதை அவரது பதிலில் புரிந்துகொள்ள முடிந்தது. ’அப்படி நினைத்திருந்தால் அக்கா உயிரோடு இருக்கும்போதே எனக்கான பதவியை கேட்டுப் பெற்றிருக்க முடியும். இப்பொழுது வரைக்கும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை’ என்று சசிகலா சொன்னார்கள்.
இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருப்பவர்கள், தங்களுக்கு உடன்பாடில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நாசூக்காக தவிர்த்துவிடுவார்கள். ஆனால், சசிகலா எந்தக் கேள்வியையும் அப்படி ஒதுக்கவில்லை. அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக நேர்மையான பதிலைத் தந்தார்” என்று கூறியுள்ளார்.
மேலும், 5 நிமிடங்கள் மட்டுமே தனக்கு பேட்டி கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்த சசிகலா, பேட்டி தொடங்கிய உடன் 45 நிமிடங்கள் பேசியதாக சொல்லும் அப்சரா, எந்தக் கேள்விக்கும் தயக்கம் இல்லாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.