மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

Prasanth K

திங்கள், 21 ஜூலை 2025 (15:57 IST)

மதுரையில் மாநாடு நடத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கேட்டிருந்த நிலையில் மாநாடு குறித்து காவல்துறை சார்பில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்டு 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது முதலே தென் மாவட்டங்களில் தவெகவினர் உற்சாகமிகுதியோடு இருந்து வருகின்றனர். மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் இப்போதே முன்னேற்பாடுகள் பரபரக்கிறது.

 

மாநாடு நடத்துவதற்காக மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி என்ற இடத்தை தவெகவினர் தேர்வு செய்துள்ளனர். அங்குள்ள 500 ஏக்கர் நிலத்தை சீரமைக்கும் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் மதுரை மாநாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டி கடந்த 16ம் தேதி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.

 

ஆனால் அந்த மனுவில் மாநாடு தொடர்பான பிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தவெகவிற்கு காவல்துறை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநாடு நடத்தப்போகும் இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதற்கான சான்று உள்ளதா? மாநாட்டில் எவ்வளவு பேர் கலந்துக் கொள்ள போகிறார்கள்? அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எவ்வாறு செய்யப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த இட வசதி, பேனர்கள், கட் அவுட் வைத்தல் என A to Z மாநாடு தொடங்கி முடியும் வரையிலான முழு திட்டமிடல்கள் குறித்து காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறைக்கு அனைத்து விவரங்களையும் விரைவில் தவெக சமர்பிக்க உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்