கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மக்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று சந்தித்து வரும் சூழலில் ரஜினி, விஜயகாந்த்தின் ஆப்செண்ட் அர்சியல் வட்டாரத்தில் சந்தேகமான சூழலை உருவாக்கியுள்ளது.
விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். கும்பகோணம் தீ விபத்து போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணம். 2005 –ல் கட்சி ஆரம்பித்த பின்னர் முன்பை விடப் பல மடங்கு சுறுசுறுப்பாக பேரிடர்க் காலங்களில் இயங்கியவர். சென்னை பெருவெள்ளத்தின் போது வேட்டியை மடித்துக் கட்டிக்க்கொண்டு மக்களோடு மக்களாக நின்றவர். ஆனால் டெல்டா பகுதிகளுக்கு கஜா புயல் தாக்கி 3 வாரங்கள் முடிந்தும் இன்னும் அவர் சென்று பார்வையிடவில்லை என்பது பொதுமக்களுக்கும் அந்தக் கட்சி அபிமானிகளுக்கும் வருத்தமளிக்கும் ஒன்றே.
இதுபற்றி விசாரித்த போது மோசமான உடல்நிலையே அவர் டெல்டாவிற்கு வராததற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இன்னும் சரிவரப் பேச முடியாமல் கஷ்டப்படுவதாகவும் நோய்த் தொற்று அபாயங்கள் இருப்பதால் அதிகமாக வெளியில் செல்லவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாலும் மட்டுமே இன்னும் டெல்டாவுக்கு செல்லவில்லையாம். ஆனால் கட்சி நிர்வாகிகளிடம் நிலைமைகளை அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம்.
ஆனால் ரஜினி டெல்டா மாவட்டங்களை இன்னும் பார்வையிடாமல் இருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது. விரைவில் கட்சித் தொடங்க இருக்கும் அவர் இது போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களை சென்று சந்திக்காதது ஒரு மோசமான நடவடிக்கையாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ரஜினி தூத்துக்குடியில் மக்கள் எதிர்ப்புக் காட்டியதைப் போல இங்கேயும் எதிர்ப்புக் காட்டக்கூடும் என அஞ்சுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.