தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தோற்றது ஏன்? - சிபிஐ விளக்கம்

Webdunia
வியாழன், 26 மே 2016 (10:19 IST)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி தோற்றது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
 

 
இதுகுறித்து சிபிஐ தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிற திமுக, அஇஅதிமுக வினரால் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது.
 
தமிழ்நாட்டில், சிறு, குறு நடுத்தர உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இயற்கை வளம் முழுவதும் வகைதொகையில்லாமல் சூறையாடப்பட்டு வருகின்றது. மாநில அரசின் மதுபான லாப வேட்டைக்கு தமிழ்நாட்டின் சரிபாதிப்பேர் குடிகாரர்களாக்கப்பட்டுள்ளனர்.
 
வேளாண்துறை நெருக்கடியால் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தமிழ்நாட்டிலும் தொடர்கின்றன. வேலையின்மை பெருகி கிராமப்புறங்கள் காலியாகிவிட்டன. படித்தவர்கள் தெருத்தெருவாய் வேலை தேடி அலைகிறார்கள். சமூகத் தளத்தில் ஜாதியப் பாகுபாடுகளும் தீண்டாமைக் கொலைகளும், கொடுமைகளும் தங்குதடையின்றி வளர்ந்துள்ளன.
 
அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கருத்துக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முற்றாகக் கைவிடப்பட்டு தனிநபர் ஆராதனைகளும், அவர் சார்ந்த சர்வாதிகார நடைமுறைகளும் வளர்ந்து வருகின்றன. இந்த மோசமான சூழலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் மாற்றுக் கொள்கை சார்ந்த அரசியல் சக்தியாக மக்கள் நலக் கூட்டணி உருவானது.
 
மக்கள் நலன் காக்கும் கொள்கை அடிப்படையில் குறைந்தபட்ச செயல்திட்டம் முதன்முறையாக மக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. ஜனவரி 26, 2016 இல் மதுரையில் நடைபெற்ற கொள்கை சார்ந்த மாற்று அரசியல் எழுச்சி மாநாடும், பரப்புரைப் பயணங்களும் அரசியல் போக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன.
 
இதன் தொடர்ச்சியாக தேமுதிக, தமாகா கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியோடு தொகுதி உடன்பாடு கண்டு அணி சேர்ந்ததால் மாற்று அரசியல் சக்தி மேலும் வலிமைபெற்றது. தேர்தல் களத்தில் மத அடிப்படைவாத சக்திகள் தனிமைப் படுத்தப்பட்டது.
 
ஆனால் அதிகார மையத்தில் செல்வாக்கு செலுத்திவரும் கார்ப்பரேட் சக்திகள் மாற்று அரசியலுக்கு எதிராகவும், இருதுருவ அரசியலை நிரந்தரமாக நிலைப்படுத்தவும் வெறித்தனமான வேகத்தில் செயல்படத் தொடங்கின. ஊடகங்களும், பத்திரிகைகளும் மாற்று அரசியலுக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டன.
 
தமிழ்நாட்டின் தேர்தல் வரலாறு கண்டிராத அளவில் ஊழல், முறைகேட்டுப் பணப்புழக்கம் பகிரங்கமாக, விபரீத விளையாட்டை நடத்தியது. இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நியாயமான சுதந்திரமான வாக்குப் பதிவுக்கான வாக்காளர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது.
 
பண விநியோகத்தை தேர்தல் ஆணையத்தால் தடுக்க இயலவில்லை. இரண்டு தொகுதிகளில் பணமுறைகேடு ஆவணரீதியாக அகப்பட்டதால் தேர்தல் ஒத்திப் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் மடக்கிப் பிடிக்கப்பட்ட ரூ.570 கோடி குறித்து பல்வேறு முரண்பாடான தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
 
தொழில் குழும நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகள் என்ற பெயரால் கருத்து திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த நடவடிக்கைகள் தேமுதிக, ம.ந.கூ, தமாகா அணி மீது மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படுத்தியது.
 
தேர்தல் தீர்ப்பில் உள்ள படிப்பினைகளை விரிவாக பரிசீலித்து மாற்று அரசியல் சக்தியை முன்னெடுத்து சென்று மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர் கட்சியாக செயல்படுவது எனவும், மக்கள் நலக் கூட்டணியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்