சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா திமுகவினருக்கு யார் தலைவர் என்று அவர்களே குழப்பத்தில் உள்ளனர் என கூறினார்.
இன்று முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு குறித்து பேசியபோது அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெயலலிதா கச்சத்தீவு தொடர்பாக நான் பேசும் போது பதில் சொல்ல முடியவில்லை என்றால், உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும். உங்கள் தலைவர், தலைவர்தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர்தான் உங்கள் தலைவரா? என கேள்வி எழுப்பினார்.
நான் கேட்கின்ற கேள்விகள் கருணாநிதியைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்குப் பதில் சொல்ல தைரியம் இருந்தால் அவர்களுடைய தலைவரை இங்கே அழைத்து வரவேண்டும் இங்கே பதில் சொல்வதற்கு.
மேலும் திமுகவினருக்கு தலைவர் யார் என்ற குழப்பம் உள்ளதாக பேசிய ஜெயலலிதா, அவர்களுடைய தலைவர் யார்? திமுகவின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரா? யார் தலைவர் என்பதிலேயே அவர்களுக்கு குழப்பம் என கூறினார்.