சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த சின்னம் சற்றுமுன்னர் நமது கொங்கு வேளாளர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தொப்பி சின்னம் கிடைக்காவிட்டால் கிரிக்கெட் பேட் அல்லது விசில் சின்னம் வேண்டும் என்றும் தினகரன் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் சற்றுமுன்னர் இந்த இரண்டு சின்னங்களும் வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் பரபரப்பிலும் அதிருப்தி அடைந்தும் உள்ளனர்.
இந்த நிலையில் தினகரனுக்கு சின்னம் ஒதுக்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் தினகரன் கேட்டிருந்த மூன்று சின்னங்களும் மற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் தற்போது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள மற்ற சின்னங்களில் ஏதாவது ஒன்றை தினகரன் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படியே அவர் ஒரு சின்னத்தை தேர்வு செய்தாலும், அதே சின்னத்தை வேறு சுயேட்சை வேட்பாளர் கேட்டால் மீண்டும் குலுக்கல் முறையில் அந்த சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். எனவே தினகரனுக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்பது அதிகாரபூர்வமாக அறிய இன்னும் சில நிமிடங்களோ அல்லது சிலமணி நேரங்களோ ஆகும் என்று கூறப்படுகிறது.