புயல் உண்டு.. ஆனால் கனமழை இல்லை - வெதர்மேன் தகவல்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (15:34 IST)
இன்னும் 36 மணி நேரத்தில் அந்தமான் பகுதியில் ஒரு புயல் தோன்றும், அதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று செய்திகள் வெளியானது.


 
எனவே, புயலில் பாதிப்பு என்னவாக இருக்குமோ என சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வாழும் மக்கள் ஒருவித பீதியில் உள்ளனர். ஏனெனில் சமீபத்தில் உருவான ஓக்கி புயல்  கன்னியாகுமரியை சின்னா பின்னமாக்கியது.
 
இந்நிலையில், தற்போது உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பெரிதாக மழை கிடைக்காது என வெதர்மேன் எனப்படும் தன்னார்வ ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்தம் நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். அதன் பின் அது புயலாக மாறும். இதனால் வானில் மேகக் கூட்டம் உருவாகும். ஆனால், பெரிதாக மழை இருக்காது.
 
இந்த புயல் ஆந்திர கடற்கரையை நெருங்கும் போது வலுவிழந்து காணப்படும். அதனால், அதிகபட்சம் ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் மழை பெய்யும். இந்தப் புயலால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேநேரம் வானிலை மையத்தின் அறிவிப்புகளை பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்