தினகரன் போட்டியிடட்டும்; வெற்றி எங்களுக்கே - ஓ.பி.எஸ் அணியின் நம்பிக்கை

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (12:39 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தாங்களே வெற்றி பெறுவோம் என ஓ.பி.எஸ் அணி திடமாக நம்புகிறது.


 

 
ஆர்.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே.நகர் தொகுதில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிர் அணியாக கருதுகிறோம். கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன்.  மறைந்த முதல்வர் ஜெ.வின் நலத்திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்படும். வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்தார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தினகரன் அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் துணைப் பொதுச்செயலாளராக நியனம் செய்யப்பட்டது செல்லாது. இதை தேர்தல் கமிஷன் அனுமதிக்காது.

அதையும் மீறி, தினகரன் போட்டியிடட்டும். ஆனால், நாங்களே வெற்றி பெறுவோம். அவர்களின் தேர்தல் வியூகத்தை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். ஆர்.கே.நகர் முழுவதும் இரட்டை இலை சின்னத்தை வரைந்து வைத்துள்ளனர். ஆனால், இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என  தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும்.  எனவே, அவர்கள் செய்தது எங்களுக்கு வெற்றியை தேடிக் கொடுக்கும். சசிகலாவின் நியனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்துவிட்டால், தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. 
 
அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதி மக்கல் இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுவார்கள். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெ.வின் மர்ம மரணத்தில் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். இது எங்களுக்கு பலத்தைக் கொடுக்கும். வெற்றி எங்களுக்கே” என அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்