உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அரசின் “இறுதி ஊர்வலத்தை” நடத்துவது குறித்துப் பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியானதை தொடர்ந்து, சுல்தான்பூர் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் பிரசாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் போராட்டத்தின்போது, மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து பேசும்போதே இவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாஜக புகார் அளித்து, மருத்துவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அக்டோபர் 26, 2025 அன்று வெளியிட்ட உத்தரவில், டாக்டர் பிரசாத்தின் கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்றும், அவை அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இவர் அயோத்தி கோட்ட அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு, முன் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை இவரது சஸ்பெண்ட் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.