அமெரிக்காவில் டிரம்பை கலாய்த்து படம் எடுக்கிறார்கள் - மெர்சலுக்கு ஆதரவாக விஷால்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (15:28 IST)
விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
 
அந்நிலையில், மெர்சல் படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், திருமாவளவன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் நடிகர் விஷால் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “மெர்சல் படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிரட்டல். தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய கூறும் அதிகாரம் இல்லை. திரைப்பட வசனத்தை அரசியல் கட்சிகள் தீர்மானித்தால் தணிக்கை வாரியம் எதற்கு?
 
எல்லோரையும் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம். தான் நினைத்தை கூறும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடித்து காட்சிகள் வைக்கப்படுகின்றன.
 
மெர்சல் படம் மூலம் சமூக கருத்தை கூறிய விஜய், அட்லீ, தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்” என அவர் கூறியுள்ளார்.
 
மெர்சலுக்கு திரைத்துறையினர் முதல் கொண்டு அரசியல்வாதிகள் வரை ஆதரவு தெரிவித்து வருவது, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்