பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் உள்ள மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 16வது இடம்..!

Siva

வியாழன், 19 ஜூன் 2025 (07:06 IST)
நாடு முழுவதும் பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. 
 
2023-24 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தரக்குறியீட்டு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் செயல்திறன் தரக்குறியீடு, மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுக்கான செயல்திறன் தரக்குறியீடு நேற்று வெளியானது.
 
இந்தக் குறியீட்டில், வகுப்பறை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதி, மாணவர்கள் உரிமை, பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு, கற்றல் திறன், நிர்வாகச் செயல்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
அந்த வகையில், 1000-க்கு 703 புள்ளிகளுடன் சண்டிகர் முதலிடத்திலும், பஞ்சாப், டெல்லி, குஜராத், ஒடிசா, கேரளா, டாமன் டையூ, ஹரியானா, கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
 
சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம், அந்தமான், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. அதேபோல், மத்தியப் பிரதேசம், சிக்கிம், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், லடாக் ஆகியவையும் இந்த பிரிவில் உள்ளன.
 
குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக தெலங்கானா, அசாம், ஜார்கண்ட், திரிபுரா, மணிப்பூர், சத்தீஸ்கர், பீகார், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2022-23 ஆம் ஆண்டில் 563 புள்ளிகள் பெற்றிருந்த தமிழ்நாடு, இந்த முறை 559 புள்ளிகள் பெற்று, குறியீட்டு புள்ளியில் சரிந்து 16வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்