என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு: விஷால் ஆவேச அறிக்கை

வெள்ளி, 8 டிசம்பர் 2017 (16:09 IST)
நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆளுங்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரிக்க வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் விஷால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ:
 
ஆர்கே நகர் சட்டமன்ற இடைதேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவே... ஆர்கே நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் என்னும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணிகளும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் தொடரும்.
 
நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவை எடுக்கவே இல்லை.
 
எனது போராட்டத்தில் என்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
 
என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்.
 
ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை...ஆர்கே நகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் கன்னியாகுமரியில் நடக்கும் குளச்சல் மீனவர்கள் போராட்டம். மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியம்.  நியாயமான கோரிக்கைகளுடன் இரண்டு நாட்களாக போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து பேசி அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்கே நகர் மக்கள் கூட இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரைத் தான் கொடுக்கும். மீனவர்கள் சார்பிலும் ஆர்கே நகர் தொகுதி மக்கள் சார்பிலும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்