நீட்க்கு எதிரான விஜய்யின் குரல்..! பாகுபாடின்றி பாராட்டிய திமுக, அதிமுக! அப்செட்டில் பாஜக!

Prasanth Karthick

புதன், 3 ஜூலை 2024 (12:52 IST)
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.



சமீபமாக ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாவட்ட அளவில் முன்னணி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கி வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய். இந்த ஆண்டும் அவ்வாறாக மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

முதலில் நடந்த விழாவில் விஜய் நீட் தேர்வு குறித்து பேசாததை பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட விழாவில் பேசிய நடிகர் விஜய் நீட்க்கு எதிரான தனது கருத்துகளை பேசியுள்ளதுடன், தமிழக அரசின் நீட் விலக்கு நிலைபாட்டை தான் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம் : ஜெயக்குமார்

விஜய்யின் இந்த பேச்சை தொடர்ந்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “திமுகவின் நீட்க்கு எதிரான போராட்டத்தை முயற்சியை ஆதரித்து விஜய் பேசியுள்ளதை வரவேற்கிறோம்” என கூறியுள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் விஜய்யின் கருத்தை ஆதரித்து பாராட்டியுள்ளனர்.

ஆனால் பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் “மாணவ மாணவிகள் மத்தியில் விஜய் பேசிய கருத்து வருந்தத்தக்கது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் பேசியிருக்க வேண்டும். நிர்வாக குளறுபடிகளை சீர் செய்யலாமே தவிர நீட்டை ஒதுக்க முடியாது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்