2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் கட்சி கூட்டணி, மாநாடு என அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழக அரசியல் தற்போது பலராலும் கவனிக்கப்படும் கட்சியாக உள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
தவெக போட்டியிட உள்ள முதல் தேர்தல் என்பதாலும், விஜய்யின் பிரபலத்தாலும் இந்த தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றங்கள் எந்தளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கேற்ப பூத் கமிட்டி வரை கட்சியை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தற்போதே சில முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து வரும் நிலையில், தவெகவிலும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
முக்கியமாக விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. தனது சினிமா பாணியிலும், அரசியல் பாணியிலும் மறைமுகமாக எம்ஜிஆர் ஸ்டைலை பின்பற்றும் விஜய், இந்த தொகுதி ரூட்டிலும் எம்ஜிஆர் பாணியை பின்பற்ற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
1977ல் அதிமுக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர், அருப்புக்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அடுத்து 1980ல் நடந்த தேர்தலில் மதுரை மேற்கு, அதற்கு பின் ஆண்டிபட்டி என்று தொடர்ந்து மதுரை சுற்றுவட்டாரத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த வகையில் தற்போது விஜய்யும், மதுரையை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் போட்டியிட்ட மதுரை மேற்கு தொகுதியிலேயே விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. ஷூட்டிங்கிற்காக விஜய் சென்றபோதே மதுரையில் மகத்தான வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியில் உள்ளாராம் விஜய். இதனால் விரைவில் மதுரையில் பிரம்மாண்ட பேரணி, மாநாட்டுடன் தான் போட்டியிடும் தொகுதி குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K