தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.. விஜய் அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 27 அக்டோபர் 2024 (19:07 IST)
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பேசிய விஜய், தனது கட்சியின் 5 கொள்கை தலைவர்களைப் பற்றி கூறியுள்ளார்.
 
முதலாவது, பெரியார்: பெரியார் என்றால் கடவுள் மறுப்பு கொள்கை என்று சிலர் பேசுகின்றனர். ஆனால் நாங்கள் கடவுள் மறுப்பு கொள்கையை பேச மாட்டோம்; அனைத்து மதங்களுக்கும் ஆதரவாகவும் அரணாகவும் இருப்போம். அதே நேரத்தில், பெரியார் காட்டிய பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தம், சமூகநீதி போன்ற நிலைப்பாடுகளை முன்னேற்றுவோம்.
 
அடுத்ததாக, காமராஜர்: கல்விக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உழைத்த உத்தமர். மதச்சார்பின்மையை ஆழமாக விதைத்தவர்; நேர்மையான நிர்வாக செயல்முறைக்கு உதாரணமானவர். அவரை எங்கள் கொள்கை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
 
அடுத்ததாக, அண்ணல் அம்பேத்கர்: சமூகநீதியை நிலைநாட்டியவர் என்பதால் அவரையும் எங்கள் கொள்கை தலைவராக அறிவிக்கிறோம்.
 
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ராணி வேலு நாச்சியார்: தனது கணவரை இழந்த பிறகும் மண்ணைக் காக்க போர்க்களம் புகுந்த புரட்சியாளர்; இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி என்பதால், அவரை நம்முடைய கொள்கை விளக்க தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
 
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள்: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி, குழந்தை பெற்று மீண்டும் சிறைக்கு சென்றவர்.
 
இந்த ஐந்து தலைவர்களையும் எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொள்வதை பெருமையாக நினைக்கிறோம் என்று விஜய் பேசினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்