புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது!

J.Durai

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:36 IST)
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா (29.08.24) தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
 
பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் லட்சகணக்கான  பக்தர்கள்  குவிந்தனர்.
 
கீழ்திசைநாடுகளின் லுர்து நகரம் என அழைக்கப்படும் வேளாங் கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள கட்டிட கலையில் பசலிக்கா அந்தஸ்தை பெற்ற வேளாங்கண்ணி பேராலயம்
வங்க கடல்கரையில் அமைந்துள்ளது.
 
இவ்வாறு பல்வேறு  புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி செப்டம்பர் மாதம் 7ம் தேதி  நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அன்னையின் அருளாசியை பெற தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள்  வேளாங்கண்ணியில் திரண்டு நிர்பார்கள். 
 
இந்த ஆண்டும் பெருவிழா நேற்று(29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் 5.45 மணிக்கு கொடியை புனிதம் செய்து வைத்தார். 
 
இதை தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேராலய முகப்பில் இருந்து அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடி ஊர்லமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது.
 
பல்வேறு மாவட்டம், பல்வேறு மாநிலங்களில் இருந்து அங்கு குவிந்து இருந்த லட்சகணக்கான பக்தர்கள் ஆவே மரியா, மரியே வாழ்க என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. அப்போது ஆண்டுபெருவிழா கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து வாணவேடிக்கை கண்களை கவர்ந்தது. 
 
சிறிது நேரத்தில் பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. கலெக்டர் ஆகாஷ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குதந்தைகள்ஆரோஜேசுராஜ், லுர்து சேவியர், ஆரோக்கிய பரிசுத்தராஜ், மார்டின்சூசைராஜ், பிரான்கோஎடின், செபாஸ்டின் மற்றும் திருத்தல பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
விழாவை காண பக்தர்கள் பேரலாய வளாகத்தில் தங்கியிருந்தனர். வேளாங்கண்ணி ஆர்ச் தொடங்கி கடைவீதி சாலை, கடற்கரை சாலை, நடுத்திட்டு, மாதாகுளம்,பழைய வேளாங்கண்ணி என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகள் மட்டுமே தெரிந்தது. காவல்துறையின் சார்பில் திருச்சி மத்திய மண்டல ஜஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டிஐஜி ஷியாஉல்ஹக் ஆகியோர் தலைமையில் நாகப்பட்டினம் எஸ்பி அருண்கபிலன் மேற்பார்வையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்ட எஸ்பிகள், 5 ஏடிஎஸ்பிக்கள், 18  டிஎஸ்பிக்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 150 சப்- இன்ஸ்பெக்டர்கள் என 3  ஆயிரம் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், ஊர்க்காவல் படை என மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
சுகாதார துறையின் மூலம் ஆர்ச் மெயின் ரோடு,ரயில் நிலையம், ஆயிரம் கால் மண்டபம், பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாதா குளம், புனித மேரிஸ் பார்க்கிங் பேருந்து நிலையம், கடற்கரை சுனாமி குடியிருப்பு,பேராலய கலையரங்கம் ஆகிய 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வேளாங்கண்ணியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் குடந்தை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் திண்டுக்கல், ஓரியூர், மணப்பாறை, தஞ்சாவூர், சிதம்பரம் ,திருச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டது. 3 மாவட்ட அலுவலர்கள் தலைமையில் 9 தீயணைப்பு வாகனங்களுடன் 182 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
காவல்துறை சார்பில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இரவு,பகலாக கண்காணித்து வந்தனர். இன்று (30ம் தேதி) முதல் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பேராலயம் மேல்கோவில், மாதாகுளம், பேராலயம் கீழ்கோவில் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 7ம் தேதி இரவு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதாமன்றாட்டு, நவநாள்ஜெபம் திருத்தல கலையரங்களில் நடைபெறும். இதை தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர்  சகாயராஜ் தேரை புனிதம் செய்து வைக்கின்றனர். இதை தொடர்ந்து சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு பேராலய முகப்பில் இருந்து தேர்பவனி புறப்படும். 
 
கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை தேர் வந்தடையும். அப்போது பக்தர்கள் மரியே வாழ்க, ஆவே மரியா என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷம் எழுப்புவார்கள். இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 8ம் தேதி காலை விண்மீன் கோவிலில் காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படும். பின்னர் பேரலாய கீழக்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணைஆசியுடன் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைபெறும். செப்டம்பர் மாதம் 6ம் தேதி மாலை 3 மணிக்கு கொங்கனியில் சிலுவைபாதையும், 4 மணிக்கு தமிழில் சிலுவைபாதையும், 5 மணிக்கு ஆங்கிலத்தில் சிலுவைபாதையும், 5.30 மணிக்கு மராத்தியில் சிலுவைபாதையும் நடைபெறும். 2ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழில் ஜெபமாலை நடைபெற இருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்