மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு இன்று தொடக்கம்: வைகோவுக்கு சீட் உண்டா?

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (08:58 IST)
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்தபடி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதேபோல் வைகோவை தவிர திமுக வேட்பாளராக தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் எம்.எல்.ஏக்களின் கணக்கின்படி மூன்று அதிமுகவினர்களும், மூன்று திமுகவினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களாகும் வாய்ப்பு உள்ளது. மூன்று அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அதிமுக இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 11ஆம் தேதி கடைசி நாள் என்பதும்,  தேவைப்பட்டால் ஜூலை 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
வைகோ திமுகவில் இருந்தபோது கடந்த 1978ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கர்ஜித்து வந்தார் என்பதும், அதன்பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர் ஒரே ஒரு முறை மக்களவைக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் மாநிலங்களவையை கதிகலக்க வைகோ தேர்வு செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்