சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்: வைகோ எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:47 IST)
மொழி திணிப்பு காரணமாக சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்த நிலைதான் இந்தியாவிலும் மொழி திணிப்பு செய்தால் ஏற்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. 
 
ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது. 
 
இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, "ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி" என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 
 
அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். எனவே ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறேன்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்