சசிகலா புஷ்பா வேறு கட்சிக்கு மாறினால் பதவியை இழக்கும் சூழல்: கட்சி சாராத உறுப்பினராக இருப்பாரா?
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (07:53 IST)
மாநிலங்களவையில் நேற்று ஹாட் டாப்பிக் சசிகலா புஷ்பா விவகாரம் தான். முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி டெல்லியில் எந்த ஒரு எம்.பி.யும் இப்படி பகிரங்க குற்றச்சாட்டு சொன்னது இல்லை.
நேற்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா ஜெயலலிதா பற்றி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கும் போது அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் கட்சி தலைமை தன்னை பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாக கூறிய சசிகலா புஷ்பா, எத்தகைய சூழல் வந்தாலும், தான் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தற்போது வேறு எந்த கட்சியில் சேர்ந்தாலும் அவர் தனது பதவியை இழக்க வேண்டி வரும். அவருடைய பதவி காலம் 2020 வரை இருப்பதால் அவர் வேறு கட்சிக்கு தாவும் சூழல் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் சசிகலா புஷ்பா எந்த ஒரு கட்சியிலும் சேராமல் கட்சிசாராத உறுப்பினராக மாநிலங்களவையில் செயல்படலாம். இதற்கு அவரை கட்சி சாராத உறுப்பினராக மாநிலங்களவைத் தலைவர் அறிவிக்க வேண்டும்.