திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – வடப்போச்சே மூடில் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (14:30 IST)
திருவாரூர் இடைத்தேர்தலை தனது அரசியல் எண்ட்ரிக்கு ஆயுதமாகப் பயன்படுத்த எண்ணியிருந்த உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ரத்தால் இப்போது அப்செட்டில் இருக்கிறாராம்.

திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் அறிவித்தது அதையடுத்து திமுக, அமமுக ஆகிய இருக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். திமுக சார்பில் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டார். அமமுக சார்பில் காமராஜ் அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளர் தேர்வில் இருந்தது. மும்முனைப் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் கஜாப் புயல் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது..

இந்தத் தேர்தல் ரத்தால் அறிவிக்கப்பட்ட திமுக, அமமுக வேட்பாளர்களை விட உதயநிதி ஸ்டாலின்தான் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். என்னக் காரணம் என விசாரித்தால் திருவாரூர் தேர்தல் மூலமே தன்னை அரசியலில் ஒரு ஆளுமையாக நிலை நிறுத்திக் கொள்ளும் மாஸ்டர் பிளான் ஒன்றைப் போட்டிருந்தாராம்.

என்னதான் கலைஞரின் பேரனாகவும், ஸ்டாலினின் மகனாகவும் இருந்தாலும் திடீரென உதயநிதியை திமுக வில் முன்னிறுத்துவது திமுக தொண்டர்கள் உள்பட தலைவர்கள் சிலருக்குமேக் கூட பிடிக்கவில்லையாம். அரசியல் விழாக்களில் மேடைகளில் அவரை உட்கார வைப்பதுக் கூட சிலருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறதாம். இது போன்ற பிரச்சனைகளை சமாளித்து திமுக வில் தன்னை அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கிக் கொள்ள இந்த இடைத்தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார் உதய்.

திருவாரூர் தொகுதி திமுக வின் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த தொகுதியில் திமுக வேட்பாளர்கள் யாரும் தோற்றதேயில்லை என்ற வரலாறு இருக்கிறது. எனவே இந்த தேர்தலிலும் திமுக வே வெற்றி எளிதாக பெறும். ஆனாலும் அந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதிதான் எனக் கட்சியில் உள்ளோர் நினைக்க வேண்டும் என திமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்திருக்கிறார் உதயநிதி. இதற்காக ஒரு மாதம் திருவாரூரிலேயே தங்கி தேர்தல் பணிகளை மேற்கொள்ள இருந்தார். அதற்காக தனது ஷூட்டிங்கைக் கூட தள்ளி வைத்தார். தனக்கு ஆதரவாக தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களையும் திருவாரூரில் ஆஜராகும் படியும் அன்புக் கட்டளையிட்டிருந்தாராம்.

இவ்வளவு ஏற்பாடுகள் செய்த நிலையில் தேர்தல் ரத்தானதில் மிகவும் அப்செட் ஆகியுள்ளதாகவும் தற்போது ஷுட்டிங் வேலைகளில் கவனத்தை செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்