பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினகரனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை செய்ய தவறவிட்டார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று சென்னை வந்தார். இந்த சூழலில் திமுகவின் நிலைப்பாடு குறித்து வதந்தி பரவியது. திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது, மாறாக ஆளும் கட்சிக்கு அது வசதியாக போய்விடும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக திமுக தீர்மானம் நிறைவேற்றம். அரசு விழாக்களை அரசியல் மேடையாக பயன்படுத்துவதாக தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கண்டனம். பெரும்பான்மை இழந்த அரசை 28 நாட்கள் தொடர விட்டது தமிழக அரசியலில் கருப்பு அத்தியாயம் என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.