இனி ஒருவருக்கு இப்படி நடக்க கூடாது: மாணவர் மரணத்திற்கு டிடிவி ஆதரங்கம்!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (16:13 IST)
கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலியாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது என டிடிவி தினகரன் பதிவு. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இன்று கார்க்கிவ் பகுதியில் காலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியாகியுள்ளார். 
 
அவர் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வேதனை அடைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, உக்ரைன் நாட்டில், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் குண்டுவீச்சில் பலியாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அம்மாணவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அங்கே சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இனி ஒருவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படாதவாறு விரைந்து செயல்பட வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்