வருமான வரித்துறை சோதனை மூலம் மிரட்டிப் பார்க்கும் மத்திய அரசை எதிர்கொள்ளும் வியூகங்கள் குறித்து அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சில உத்தரவுகளை தினகரன் இட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளித்து வருகிறார். இதில் முக்கியமாக, ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு யார் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் முதல் அமைச்சர் உட்பட பல அதிமுக அமைச்சர்களின் பெயர் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே, வருமான வரித்துறையினரின் விசாரணையில் விஜயபாஸ்கர் வாயை திறந்து உண்மையை கூறிவிட்டால் நாமெல்லம் சிக்கி விடுவோம் என்கிற பயத்தில் சில அமைச்சர்கள் தூக்கம் இன்றி தவிப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும், இந்த சோதனையை அடுத்து சிபிஐ விசாரணையும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பின்னால் மத்திய அரசு இருப்பது தெரிந்தும், இதுபற்றியெல்லாம் பயம் கொள்ளாத தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும், இது எதிர்கட்சிகள் செய்த சதி எனவும், தன்னுடைய வெற்றி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் சிரித்தபடியே கூறி வருகிறார்.
மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுங்கள் எனவும் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தான் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால் மத்திய அரசு இப்படி பயமுறுத்துகிறது. எப்போது நடந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என எல்லா இடத்திலும் பேசுங்கள் என தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வருமான வரித்துறையினரின் சோதனையை எதிர்த்து, அதிமுக ஆட்சிக்கு ஆதரவான அரசியல் கட்சிகளை அறிக்கை விட சொல்லுங்கள். இப்படி செய்தால் மத்திய அரசு கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். இல்லையேல், சோதனையை இன்னும் தீவிரப்படுத்துவார்கள் எனக் கூறியுள்ளாராம்.
அதன் விளைவாகத்தான் அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை முழுவதும் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்” என போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.