ஆர்.கே.நகர் தொகுதியில் பெண்களின் ஓட்டைப் பெற தினகரன் தீட்டியுள்ள திட்டம் ஓ.பி.எஸ் மற்றும் திமுக தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஓ.பி.எஸ் அணியின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதால், தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். மேலும், அதிமுக என்ற பெயரையே பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
மேலும், மதுசூதனன், தீபா, மருது கணேஷ், கங்கை அமரன் போன்ற வலுவான போட்டியிருப்பதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ள தினகரன் தினமும் அந்த பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், மதுசூதனன் அதிக வாக்குகள் பெறுவார் என சில கருத்துகணிப்பு வெளியானதால் தினகரன் அதிர்ச்சியில் இருக்கிறார்.
ஏற்கனவே, ஜெ.வின் மரணத்தில் ஆர்.கே.நகர் தொகுதி பெண்கள் சசிகலா மீது கோபத்தில் இருக்கின்றனர். தற்போது அந்த கோபம் தினகரன் மீது திரும்பியிருக்கிறது. செல்லும் இடமெங்கும் பல பெண்கள் அவரை கேள்விகளால் துளைத்து எடுக்கின்றனர். எனவே, பெண்களின் ஓட்டை பெறவில்லையெனில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை தினகரன் தரப்பு உணர்ந்துள்ளது. எனவே, அதை சரி செய்ய சில திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களில் பெரும்பாலானோர் கீழ்தட்டு மக்கள் என்பதால் அங்கு கந்து வட்டி தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஜெயலலிதா அங்கு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற பின், பெண்களுக்கு என சுய உதவிக் குழுக்களை தொடங்கி அதன் மூலம் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த திட்டம் அந்த பகுதி பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
இதைக் கையில் எடுத்த தினகரன், கடன் பெற்றுள்ள பெண்கள் அனைவரின் கடனையும் தான் கட்டி விடுவதோடு, இனி பெறப்போகும் கடன் தொகையையும் அதிகரித்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளாராம். இதனால் பெண்களின் ஓட்டுகளை அவர் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இதில் முக்கிய விஷயம் என்னவெனில், இதுகுறித்து ஓ.பி.எஸ் அணியோ, திமுகவோ தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால், பெண்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முடிவில் தீவிரமாக தினகரனும், அதை எப்படி தடுப்பது என எதிர் தரப்பினரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.