கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம்.! வானதி சீனிவாசன்.!!

Senthil Velan

வியாழன், 18 ஜனவரி 2024 (15:20 IST)
கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம் என்றும்  ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி  என்றும்  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு,  பாஜகவினர் பல்வேறு கோவில்களில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ராமர் கோயில் அழைப்பிதழை முதலமைச்சர்  நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். 

 
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது. பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது.  திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்
 
ஜல்லிக்கட்டு, மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்

ALSO READ: டிராக்டர் மீது சொகுசு கார் மோதி விபத்து.! மகள், மகன் பலி! தந்தை, தாய் படுகாயம்..!!
 
கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள் தனம் என்றும் ஜல்லிக்கட்டு சனதான தர்மத்தின் ஒரு பகுதி என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள், விவாதிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார் என்றும்  மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்