இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
15வது ஊதிய ஒப்பந்தம், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையின் போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இடமாற்றம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக பணியாளர்களை வைத்தே பேருந்துகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் பின்பக்க இருக்கையின் தரைதளம் உடைந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, வரும் 21 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதோடு, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இயங்கும் அரசுப் பேருந்துகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.