குரூப் 4 குளறுபடிகள்; மீண்டும் தேர்வு முடிவுகள் வெளியீடா? இன்று அவசர ஆலோசனை கூட்டம்!

புதன், 29 மார்ச் 2023 (08:50 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இன்று அதுகுறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதியன்று வெளியானது. 10,117 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எழுத்துத் தேர்வு, தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு ஆகிய வகைமைகளில் தரவரிசை வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தரவரிசை குறைவாக உள்ளதாகவும், சிலருக்கு தேர்வு முடிவுகளே வரவில்லை என்றும், சிலருக்கு தேர்வு தாள் சரியாக திருத்தப்படவில்லை என்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது. ஆனாலும் இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் குரல் எழுப்பின.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தேர்வுத் தாள்களை மீண்டும் திருத்தி முடிவுகள் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக்கு பின் முக்கியமான முடிவுகளை வெளியிடலாம் என்பதால் தேர்வர்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்