தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர் என்பதும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அதிமுக தொண்டர்கள் இன்று இனிப்பு வழங்கி அன்னதானம் செய்தும் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் அரசு சார்பில் மரியாதையுடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை காமராஜர் சிலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை செலுத்தப்பட உள்ளதாகவும் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஜெயலலிதாவின் திருவுரு சிலைக்கு சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.