சென்னையில் ஏழுமலையான் கோவிலின் கிளை: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (09:48 IST)
ஒரு நிறுவனத்திற்கு பொதுமக்களிடம் இருந்து அதிக ஆதரவு கிடைத்தால் உடனே அந்நிறுவனம் ஆங்காங்கே புதிய கிளைகளை தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுப்பது பிசினஸில் சகஜம். ஆனால் காலங்காலமாக திருப்பதி சென்று வழிபட்டு வரும் சென்னை உள்பட தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் ஒரு ஏழுமலையான் கோவில் கிளை கட்ட திட்டமிட்டிருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
 
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி ரெட்டி  செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அதனால் சென்னையில் பெரிய ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்தாலோசித்த பிறகு விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறோம். 
 
 
ஏற்கனவே கன்னியாக்குமரியில் கோயில் கட்டி இருந்தாலும் சென்னையில் பெரிய மற்றும் விசாலமான கோயிலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான இடம் தேவைப்படும் பட்சத்தில் ஆந்திர முதலமைச்சர் தமிழக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்' என்று கூறினார். 
 
 
இந்த திட்டம் குறித்து சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் தலைவர் கிருஷ்ணா ராவ் கருத்து தெரிவித்தபோது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு சென்னையில் இடம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது நாங்கள் மீண்டும் இடத்திற்காக காத்திருக்கிறோம்' என்று கூறினார். எனவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்