திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வயதான மூதாட்டியை ஜெயலலிதா புகைப்படத்தை விழுந்து கும்பிட வைத்த சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா இனாம்கிளியூர் கிராமத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை ஒரு பயனாளிக்கும், ஊனமுற்றோர் உதவித்தொகை ஒருவருக்கும், ஒருவருக்கு விதவை உதவித்தொகை உட்பட 14 பயனாளிகளுக்கு ஆணைகளை ஆட்சியர் மதிவாணன் வழங்கினார்.
அப்போது மூதாட்டி ஒருவர், முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை பெற்றதும் ஆட்சியரின் காலில் விழுந்து வணங்க முயற்சித்தார். அப்போது அவர், என்னை வணங்க வேண்டாம், முதலமைச்சரை வணங்குங்கள் என கூறி ஜெயலலிதா படத்தை காட்டியுள்ளார்.
நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில் இருந்த மூதாட்டி முதலமைச்சர் ஜெயலலிதா படம் இருந்த பிளக்ஸ் போர்டு முன் கீழே விழுந்து வணங்கினார். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.