வைகோவை கழற்றிவிடும் திருமாவளவன் - காரணம் இதுதான்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:50 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுச்சேரியில் நடைபெறவுள்ள ’அரசியல் அமைப்பு மாநாடு’ நிகழ்ச்சிக்கு வைகோவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் செயப்ல்படும் என்று அறிவித்தனர்.

அதன்பிறகு, பொதுமக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் நல கூட்டியக்கமாக செயல்பட்டது. பின்னர், 2016 சட்டமன்ற தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்தது.

பின்னர், இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனையடுத்து, இந்த கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகியவை விலகின.

இதற்கிடையில், திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் மற்ற கட்சிகள் பங்கேற்காமல் தடுக்கும் பணியில் வைகோ ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை ஒட்டி செய்தியாளர்களிடத்தில் பேசிய வைகோ, “ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு துன்பம் எதுவும் இல்லை; 90% பேர் பிரதமர் மோடியை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

ஆனால், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு, மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியில் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அரசியல் அமைப்பு மாநாடு நடத்தப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய திருமாவளவன், ”ரூபாய் நோட்டு பிரச்சினையால் சாமான்ய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். மோடியின் இந்த திட்டத்திற்கு எங்களோடு ஒருமித்த கருத்துடைய கம்யூனிஸ்டு செயலாளர்கள் ஜி.ராம கிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் மோடியின் திட்டத்திற்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் அழைக்கப்படவில்லை. உடன்பாடு உள்ள வி‌ஷயங்களில் மக்கள் நலக்கூட்டணி இணைந்து செயல்படும்” என்று கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்