ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

Senthil Velan
சனி, 6 ஜூலை 2024 (12:02 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது.
 
சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
 
அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.
 
சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதியின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்க.! ராகுல் காந்தி..!!
 
அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்குக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்று திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்