அதிமுகவை எதிர்த்து திருமாவளவன் வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2016 (17:43 IST)
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றதை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 87 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
 
இதையடுத்து, முருகுமாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
 
அந்த மனுவில், ‘காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஒரு வாக்குசாவடியில் ஓட்டு பதிவு நடைபெறவில்லை. பல வாக்குசாவடிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டனர்.
 
இதனால், அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 87 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். முறைகேட்டின் மூலம் இவர் வெற்றி பெற்றுள்ளதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளர் முருகுமாறன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்