தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைய இருக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. எதிர்ப்புறமான அதிமுக அணியில் இருந்து கூட்டணிக் குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால் அதிமுக அணியில் பாஜக இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சில நாட்களாக பாமக அதிமுக அணியில் இணையும் என்ற ஒரு செய்தி அரசியல் வட்டாரத்தில் உலாவர ஆரம்பித்தது. அதைப்போலவே பாமக திமுக வுடன் கூட்டணி சேரவே விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக வில் உள்ள சிலர் பாமக வை கூட்டணியில் இணைத்துக்கொள்வது குறித்து ஆலோசித்ததாகவும் அதனால் கூட்டணித் தலைவர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிகிறது. இது சம்மந்தமாக பேச நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார் திருமா வளவன். 30 நிமிடம் நீடித்த அந்த சந்திப்பில் ஸ்டாலின் திருமா வளவனுக்குப் பாமக நமது கூட்டணியில் உறுதியாக இடம்பெறாது என உத்தரவாதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் திருமா வளவனும் மகிழ்ச்சியான முகத்தோடு வெளியில் வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.