எனது உயிருக்கு அச்சுறுத்தல்; திட்டமிட்டு என்னை தடுக்கிறார்கள்: ஜெ.தீபா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (09:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு சசிகலா குடும்பத்தினர் போலீசாரின் உதவியுடன் அச்சுறுத்தல் கொடுப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் ஜெ.தீபா.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் அதனை ஏற்கவில்லை. பலரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து அவரை அரசியலுக்கு அழைத்தனர்.
 
இதனையடுத்து அவர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி வருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தனக்கு சசிகலா குடும்பத்தினர் பல்வேறு வழிகளில் நெருக்கடி தருவதாக தீபா பரபரப்பு குற்றச்சாட்டு இன்றை தெரிவித்துள்ளார்.
 
அண்ணா நினைவு தினத்திற்கு மெரினாவில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற என்னை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர்.
 
இதற்கு முன்னர் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு வழங்க சென்றதற்கும் என்னை அனுமதிக்கவில்லை. காவல்துறையினர் மூலம் என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர். நான் பணம் வாங்கிவிட்டதாகவும், பேரம் பேசுவதாகவும் வதந்திகள் பரப்புகின்றனர்.
 
இதற்கும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இல்லை, நான் அதிமுகவினருடன் நெருக்கம் காட்டவில்லை. அப்படியொரு தோற்றத்தை அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார்கள் என தீபா கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்