திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மின கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகப் பெரிய கேள்வியாக உள்ளது என்றார். இங்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில், இங்கு எதுவுமே நடக்காதது போல, நல்லாட்சி நடைபெறுவது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கி, பொய்யாக பேசிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.
முதல்வர் மிகப் பெரிய உடல்நிலை பாதிப்பில் இருக்கிறார் என்றும் அது வெளியே தெரியக் கூடாது என்பதற்காகத்தான் பேன்ட் சட்டை அணிந்துகொண்டும், கை உதறுவதை மறைப்பதற்காக, கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
முதல்வர் நல்ல உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருந்தால்தான், மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று அவர் கூறினார். எனவே, திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.