கரூர் அடுத்த வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.கே.நகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள, உடலுக்கு சக்தியை கொடுக்கும் கபசுர குடிநீர் கசாய பவுடர் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து மாத்திரைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சொந்த செலவில் கொடுத்து வருகின்றார். கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பிலும், கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பிலும் கொடுக்கப்பட்ட, இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் வட்டாட்சியர் அமுதா, கரூர் அ.தி.மு.க வடக்கு நகர செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே, கொரோனா காலத்தில் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் மூன்று கட்டங்களாக இலவச அத்தியாவசிய பொருட்களும், இலவச காய்கறிகளை கொடுத்த நிலையில் நான்காவது கட்டமாக கொடுக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் கட்டமாக ஒரு லட்சம் நபர்களுக்கு இந்த இலவச நோய் எதிர்ப்பு சக்திகளை அடக்கிய கிட்டுகள் கொடுக்கப்பட்டது. மேலும், இதன் தொடர்ச்சியாக அமைச்சர் வீடுகள் தோறும் நடைபயணமாக சென்று பொதுமக்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கிய, கிட்டுகள் வழங்கப்பட்டது.