சென்னையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாய்க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் பூண்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய பூண்டின் வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் ஒரு கிலோ பூண்டின் விலை 250 ரூபாய்க்கு அதிகமாக அதிகரித்திருக்கிறது. தக்காளி, வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு தலையிட்டு விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதேபோல் பூண்டு விலை உயர்வை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று வணிகர்களும் இல்லத் தரசிகளும் கவலை அடைந்திருக்கின்றனர்.
துரித உணவகங்கள் ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு மற்றும் கோழி இறைச்சி விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் தொழிலை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பூண்டின் விலையும் உயர்ந்திருப்பது உணவக உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்தும் பூண்டின் வரத்து கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.