டாஸ்மாக் பார்களில் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மதுவை டாஸ்மாக் கடையில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் பதில் அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை எனக் குற்றம்சாட்டி இருந்தார்.
அதேபோல், டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகள் மற்றும் உணவு பண்டங்கள் காலாவதியானதாக உள்ளது. மேலும் அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. டாஸ்மாக் பார்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்பதுடன் மது பிரியர்கள் குடித்து வைத்துவிட்டுச் செல்லும் பழைய குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வேறொரு பாட்டில்களில் நிரப்பி அதனையும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் பார்களுக்கு சென்று மது அருந்தும் மது பிரியர்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் பார்களில் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உணவுப் பொருட்கள் காலாவதியானது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் , விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நீதிபதிகளை குறிப்பிட்டனர். இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால் மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என தெரிவித்தனர்.
மேலும், மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை டாஸ்மாக் கடையில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.