நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டு காணாமல் போய்விட்டார்கள் என்று விஜய் அரசியல் வருகை குறித்து புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனியார் விடுதியில் செய்தியாளரிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் நான் முதல்வராக இருந்தபோது, ஆளுநர் கிரண்பேடி என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டினார். அதே போல் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார் என்று அவர் விமர்சித்தார்.
நடிகரும் நண்பருமான விஜய், புதிதாக கட்சி தொடங்கி, கொடி அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும் அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் சில நடிகர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், விஜயகாந்த் போன்றோர் கட்சி ஆரம்பித்தனர், ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை என்று கூறினார்.
எனவே நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எந்த பிரச்னையும் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை என்றும் மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டு போட மாட்டார்கள் என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.